2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் நுழைந்து, மாணவர்களின் சரியான சுட்டெண்ணை (index number) உள்ளிடுவதன் மூலம் பரீட்சை முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 221,413 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 60,397 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர். இவர்களில் 146,405 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 30,122 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஒட்டுமொத்தமாக 176,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.64 சதவீதமாகும்.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றிய 111 பரீட்சார்த்திகளின் முடிவுகள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 43 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
