2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்லைன் (Online) ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்விதக் காரணத்திற்காகவும் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சை திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
அரச அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தற்போது தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்தப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், 2027 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 11 வயதினைப் பூர்த்தி செய்யாத, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பரீட்சை விதிமுறைகள் குறித்த மேலதிக விபரங்களைப் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 011-2784537, 011-2786616, 011-2784208 ஆகிய இலக்கங்களையோ, 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையோ அல்லது gr5schexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்புகொள்ள முடியும்.
