கொழும்பு, டிசம்பர் 05: 2026 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தின் (Budget) மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதி அமைச்சர் என்ற வகையில் கடந்த நவம்பர் 07, 2025 அன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 அன்று நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 42 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 08 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
மூன்றாம் வாசிப்பு விவாதத்திற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாகச் சபை அமர்வுகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் நிவாரணத்திற்கு மேலதிக நிதி: இதேவேளை, ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகக் குறைநிரப்பு மதிப்பீடு (Supplementary Estimate) ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
