சென்னை: தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரிக்கவுள்ளன. 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரஜினியும் கமலும் இணைந்து நடிக்காத நிலையில், இந்த மெகா கூட்டணி குறித்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், லோகேஷ் கனகராஜுக்கும், ‘தக் லைஃப்’ படத்தின் தோல்வியால் கமல்ஹாசனுக்கும் இந்தப் படம் ஒரு முக்கிய ‘கம்பேக்’ ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கைதி 2’ படத்திற்குப் பதிலாக, லோகேஷ் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாபெரும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.