கொழும்பு: டிஜிட்டல் மற்றும் புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நாட்டின் விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (02) தெரிவித்தார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச விவசாய மற்றும் சுற்றாடல் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வகையிலான நிலைபேறான விவசாயத்திற்கான புத்தாக்கத் தொழில்நுட்பங்கள்” என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை, வளர்ச்சி மற்றும் மீட்சிக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் எனப் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.
“விவசாயம் என்பது உணவு உற்பத்தியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது நமது சமூகத்தையும், பொருளாதாரத்தையும், கிரகத்தையும் நிலைநிறுத்துவது பற்றியது,” எனவும் அவர் குறிப்பிட்டார். புத்தாக்கங்களில் ஈடுபடும் அறிவுள்ள இளைஞர்களிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.