கொழும்பு: காலம் கடந்து செல்வதால் எந்தவொரு குற்றமும் மறைக்கப்படாது எனவும், எப்போது, எங்கு குற்றம் நடந்திருந்தாலும், குற்றவாளிகள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நேற்று (03) திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற 159ஆவது பொலிஸ் தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
“பொலிஸ் திணைக்களத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் தமது கடமையைப் புறக்கணிக்கின்றனர்,” எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “அவர்கள் உடனடியாகத் திருந்த வேண்டும்; இல்லையென்றால், அவர்களாகவே பதவி விலக வேண்டும்; அதுவும் இல்லையென்றால், அவர்களைப் பதவியிலிருந்து நீக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனக் கடுமையாக எச்சரித்தார்.
அதேவேளை, தமது கடமையை நேர்மையாகச் செய்யும் பொலிஸ் அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என அவர் உறுதியளித்தார். பொலிஸ் சேவையை நவீனமயமாக்குவதற்கும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.