கொழும்பு: மன்னார் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில், அப்பகுதியில் அமைக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானம், ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது.
இந்த ஒரு மாத காலப்பகுதியில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பு நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, ஏற்கனவே தொடங்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் முன்மொழியப்பட்ட 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எரிசக்தி என்பது ஒரு பிராந்திய வளம் மட்டுமல்ல, அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய தேசிய வளம் என ஜனாதிபதி இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார். அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.