Headlines

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தம்: ஒன்லைன் விண்ணப்ப முறை, கட்டணம் மற்றும் முழுமையான விபரங்கள்

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சை முடிவுகளின் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 25) முதல் ஜூலை 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் அறிவிப்பின்படி, பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என அனைவரும் ஒன்லைன் (online) மூலமாகவே தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை: பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, “எங்கள் சேவைகள்” (Our Services) என்பதன் கீழ் உள்ள “பரீட்சை தகவல் நிலையம்” (Exam Information Centre) என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே பயனர் கணக்கு (user account) வைத்திருப்பவர்கள் தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழையலாம். புதிய பயனர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர், தொழில் நுட்ப மற்றும் பொதுவான அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசிக்குமாறும், அதற்கான வழிகாட்டல் காணொளியைப் பார்வையிடுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கட்டணம் மற்றும் மேலதிக விபரங்கள்: மீள் திருத்தத்திற்கான கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 200 ஆகும். இக்கட்டணத்தை கிரெடிட் கார்ட் (Credit card), டெபிட் கார்ட் (Debit card) மூலமாகவோ அல்லது தபால் நிலையங்கள் மூலமாகவோ செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய பின்னர், விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் தரவிறக்கம் செய்து பரீட்சார்த்திகள் தன்னிடம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்படும்.

ஒன்லைன் விண்ணப்பத்தை ஒரு முறை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனவும், கட்டணம் செலுத்திய பின்னர் எக்காரணம் கொண்டும் அது திருப்பித் தரப்பட மாட்டாது எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, பரீட்சார்த்திகள் ‘ 1911 ’ என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது ‘ 0112 785 231 ’ என்ற உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *