முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டuகளில் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் கடின சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் ‘ஊழல்’ குற்றத்தைச் இழைத்ததாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. 2014 ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 320,000 ரூபாவை விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடையது இந்த வழக்கு.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு வழங்குவதற்காக இன்றைய தினம் (01) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான நிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் கணக்கிலிருந்து, மாரவிலாவில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் சேவைக்கு சிற்றுண்டி வழங்குவதற்காக 320,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்போது சிவில் விமான சேவைகள் அமைச்சராகப் பதவியில் இருந்த பிரியங்கர ஜயரத்ன, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியொருவரை செல்வாக்கைப் பயன்படுத்தி குறித்த கொடுப்பனவைச் செய்ய வைத்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
