அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (03) ஆரம்பித்துள்ளது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை
நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட பல தரப்பினரால் மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை உரிமை மீறல் மற்றும் தகவல் அறியும் உரிமை
உத்தேச சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். மேலும், இந்த உத்தேச சட்டம் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சர்வஜன வாக்கெடுப்பு கோரிக்கை
எனவே, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
