ஒஸ்லோ: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இலங்கையின் முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். “2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையைக் காப்பாற்ற முன்நின்ற தலைவர் ரணில் விக்ரமசிங்க,” எனப் பாராட்டியுள்ள சொல்ஹெய்ம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை” எனக் குறிப்பிட்டுள்ளார். “ஒருவேளை அவை உண்மையாக இருந்தாலும் கூட, ஐரோப்பாவில் இது ஒரு குற்றச் செயலாகக் கருதப்படாது,” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தனது ஆதரவு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், ரணில் விக்ரமசிங்க மீது வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக, “உண்மையான பிரச்சினைகளில்” கவனம் செலுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.