மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ஓட்டங்களினால் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி சாதனை படைத்த எட்டாவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இந்திய அணியின் இன்னிங்ஸை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.
இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா, மகளிர் ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் வெறும் 24 பந்துகளில் அரைச்சதம் கடந்தமை குறிப்பிடத்தக்கது.
68 ஓட்டங்களை எடுத்த நிலையில், இலங்கை அணியின் இளம் வீராங்கனை சாமுடி பிரபோதாவின் பந்துவீச்சில் ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா 59 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
184 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியின் அணித்தலைவர் சாமரி அத்தபத்து 36 ஓட்டங்களை எடுத்தார். விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆனாலும், இந்திய அணியின் பந்துவீச்சிற்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம் 72 ஓட்டங்களினால் மாபெரும் வெற்றியீட்டிய இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசியக் கோப்பையை எட்டாவது முறையாக வென்று சம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.
ஆயினும், வெற்றியீட்டிய இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்தது.
இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கான காசோலையை அணித்தலைவர் சாமரி அத்தபத்து பெற்றுக்கொண்டார்.
இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்னவும் கலந்துகொண்டார்.
இந்தத் தொடரின் உள்ளூர் ஒளிபரப்பு உரிமையை மகாராஜா மீடியா நெட்வொர்க் நிறுவனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
