மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய நடவடிக்கையொன்றின் பின்னர், சட்டவிரோத துப்பாக்கிகள், T-56 ரக தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 ரி-கட்டாஸ் (T-katas) ரக துப்பாக்கிகள், 2 கல்-கட்டாஸ் (gal-katas) ரக துப்பாக்கிகள், 4 T-56 துப்பாக்கி மகசின்கள், 95 T-56 ரக தோட்டாக்கள், பல்வேறு அளவிலான 436 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி விலங்குகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் 5 கிராம் 600 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) எனப்படும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்தே தற்போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த முதலாவது சந்தேகநபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்ற பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் ஊடாக வெலிவேரிய, வெபொட (Webada) பகுதியில் இயங்கி வரும் போதைப்பொருள் விநியோகஸ்தர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். அந்தத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட அதிகாரிகள், இரண்டாவது சந்தேகநபரைக் கைது செய்ததுடன், இந்த நடவடிக்கையின் போது ஹெரோயின், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீட்டனர்.
சந்தேகநபர் பின்னர் அலுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கான உத்தரவை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
