இந்த ஆண்டுத் திட்டங்கள் இந்த ஆண்டே நிறைவேற்றப்பட வேண்டும்”: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு
கொழும்பு: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) நடைபெற்றது. இதன்போது, “இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள், இந்த ஆண்டிற்குள்ளேயே குறிப்பிட்ட இலக்குகளை அடைய வேண்டும்” என ஜனாதிபதி அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், மக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், கடந்த காலங்களில் தேவையற்ற அரச கட்டடங்கள் கட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், நகர அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் புனரமைத்த பின்னரே மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடியால் பாதியில் கைவிடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 18 பாலம் நிர்மாணிக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும், வேரஸ் கங்கைத் திட்டம் போன்ற வெள்ளத் தடுப்புத் திட்டங்களைத் துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார். சீன, இந்தியக் கடன் உதவியின் கீழான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.