சிறைச்சாலைகளில் உள்ள பௌத்த பிக்குகள் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில், அவர்கள் சார்ந்த பீடம் ஆட்சேபனை தெரிவிக்காத வரை, அவர்கள் தமது துறவறச் சீவரத்தை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து ஊடகங்களுக்கு விசேட கூற்றையொன்றை வெளியிட்ட நீதி அமைச்சர், பௌத்த பிக்கு ஒருவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, அவர் தனது துறவறச் சீவரத்தை அணிவதற்கு முழு அனுமதி வழங்கப்படுவதாகவும், தொடர்புடைய பௌத்த பீடம் வேறு விதமாகப் பணிக்கும் வரை இந்த உரிமை செல்லுபடியாகும் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நிலையான கட்டளை 356 ஐ 356(A) எனத் திருத்துவதற்கும், திணைக்களக் கட்டளை 550 ஐத் திருத்துவதற்கு இடைக்கால வழிகாட்டலை வெளியிடுவதற்கும் குழு யோசனை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
“சிறைச்சாலை நிலையான கட்டளை 356 இல் 356(A) என்ற புதிய பிரிவைச் சேர்ப்பதற்கும், திணைக்களக் கட்டளை 550 ஐத் திருத்தி இடைக்கால வழிகாட்டல் ஒன்றை வெளியிடுவதற்கும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும் போது, பௌத்த விவகாரத் திணைக்களத்திற்கு அறியத் தருவதற்கும், பிக்குகள் அணிய வேண்டிய சாதாரண கைதிகளின் சீருடையை அகற்றுவது தொடர்பாகத் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
மற்றொரு மதத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர் கைதியாக மாறினால், இந்த விதிகள் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும்.
மேலும், ஒரு புதிய பிரிவைச் சேர்ப்பதன் மூலம் திணைக்களக் கட்டளை 550 இல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திருத்தத்தின் கீழ், ஒரு பௌத்த பிக்கு சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், அந்த நேரத்தில் அவர் தனது துறவறச் சீவரத்தை அணிவதற்கு முழு அனுமதி வழங்கப்படுகிறது.
அந்தப் பிக்குவின் மதப் பீடத்திலிருந்து (நிகாய) வேறுவிதமாகக் கோரும் அறிவிப்பு வரும் வரை இந்த அனுமதி செல்லுபடியாகும். இது தொடர்பான இடைக்காலக் குழு அறிக்கை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளருக்கும் உத்தியோகபூர்வ கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டார்.
