Headlines

விஹாரமஹாதேவி பூங்காவில் 9-வது நாளாகத் தொடரும் பிக்குகளின் போராட்டம்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சட்டப்பூர்வமாக தண்டனை அனுபவித்து வரும் பூஜ்ய கலேகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் தீவிரப் போக்கு கொண்ட பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (அக்டோபர் 24, 2026) 9-வது நாளாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

கடந்த அக்டோபர் 16 ஆம் திகதி முதல் விஹாரமஹாதேவி பூங்காவிற்குள் புகுந்து சட்டவிரோதமாக முகாமிட்டுள்ள இக்குழுவினர், நாட்டின் நீதித்துறையின் சுயாதீனமான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்றத் தடை உத்தரவையும் உதாசீனப்படுத்தும் போக்கு:

பூங்காவைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்துப் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே கடுமையான தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், அந்த உத்தரவை தளர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்திருந்தது.

இருப்பினும், நீதிமன்றக் கட்டளையை பொருட்படுத்தாமல், சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கும் வகையில் இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் உச்சநீதிமன்ற அமைப்பினால் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட ஒருவரை வீதிப் போராட்டங்கள் மூலம் தப்பிக்க வைக்க முயலும் இத்தகைய சட்டவிரோத முகாமிடுதல்களுக்கு எதிராக காவல்துறையினரும் அதிகாரிகளும் உடனடி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிவில் அமைப்புகளும் பொதுமக்களும் பலமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *