Headlines

ஊழல் வழக்குகளில் சிக்கியும் மீடியா முன்னால் பந்தா காட்டும் நாமல் ராஜபக்ச

பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய 15 மில்லியன் ரூபாயைத் தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்து, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்பட்டமான குற்றங்களை இழைத்துள்ள நாமல் ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான விசாரணைகள் எப்போது முழுமை பெறும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில், அதாவது 2016 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு சாட்சியக் கோப்புகள் முடிக்கப்பட்ட இந்த விவகாரத்தில், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) இன்று (அக்டோபர் 29) கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்துள்ளது.

ஊழலையும் தாண்டிய மீடியா நாடகங்கள்:

மில்லியன் கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிவிட்டு, கடுமையான பணச்சலவை வழக்குகளில் சிக்கியுள்ள நாமல் ராஜபக்ச தரப்பினர், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் ஏதோ தேசத்தையே தாங்கிப்பிடித்த மாவீரர்களைப் போலத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விசித்திரமான போக்கைக்கண்டு மக்கள் வெ வெறுப்படைந்துள்ளனர். சட்டத்தின் பிடியில் சிக்கி நீதிமன்றப் படிகளில் நிற்க வேண்டியவர்கள், ஊடகங்கள் மூலம் தங்களை வெள்ளை வேட்டி அணிந்த புனிதர்களாகச் சித்தரிக்க முயலும் இந்தத் திமிர்த்தனமான நாடகங்கள் யாவும் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் கேடுகெட்ட அரசியலின் வெளிப்பாடே ஆகும்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

  • இன்றைய விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடையவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
  • எனினும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம, நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
  • சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் பரிசீலித்த நீதிவான், சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று முன்னேற்றத்தை அறிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அரசியல்வாதிகள் தங்களின் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய மேற்கொள்ளும் தந்திரங்களும், வெளிப்படையாகப் பெருமை பீற்றிக் கொள்ளும் போக்கும் ஜனநாயகத்தின் மீதான கேலியாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *