கொழும்பு, மாரதானா தொழில்நுட்ப சந்திப்புப் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில், உரிய விசா அனுமதியின்றித் தங்கி ஆன்லைன் மோசடிகளில் (Online scams) ஈடுபட்டு வந்த 21 வெளிநாட்டினர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குடிவரவு அதிகாரிகளால் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 2 பெண்கள் உட்பட 12 சீன நாட்டவர்களும், 3 பங்களாதேஷ் நாட்டவர்களும், 6 இந்திய நாட்டவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கும்பல் குறித்த கட்டிடம் ஊடாக எந்த வகையான ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டது மற்றும் இவர்களுடன் தொடர்புடைய சர்வதேச வலைப்பின்னல் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கிணங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடிதுவக்குவின் நேரடி வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள அனைத்துச் சந்தேகநபர்களும் இன்று (நவம்பர் 03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
