யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம், செம்மணி இந்து மயானத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து, இதுவரை 166 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளின் ஐந்தாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
யாழ். நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த அகழ்வுப் பணிகள், எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ நிபுணர் டொக்டர் செல்லையா பிரபானன் உள்ளிட்ட நிபுணர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஏனைய தடயப் பொருட்கள், மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்காக, யாழ். நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், யாழ். பல்கலைக்கழக தடயவியல் மருத்துவ பீடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி, அபிவிருத்திப் பணிகளின்போது இந்த மனித புதைகுழி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.