சென்னை, பிப். 27: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருப்பது தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள 12 பக்கங்களைக் கொண்ட இந்த விவாகரத்து மனுவில், பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனுவில் சங்கீதா கூறியிருப்பதன் முக்கிய அம்சங்கள்:
- நடிகையுடன் தொடர்பு: எங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையின் ஆரம்பம் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- நம்பிக்கை துரோகம்: இது குறித்து 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பைத் துண்டிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், என்னை ஒதுக்கி வைத்துவிட்டு அந்தத் தொடர்பை அவர் தொடர்ந்து பேணி வருகிறார். இது கணவன்-மனைவி உறவில் செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.
- பொருளாதாரக் கட்டுப்பாடுகள்: திருமணத்திற்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால், எனக்குப் பொருளாதார ரீதியாகப் பல கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தைகளால் பலமுறை அவமானப்படுத்தியுள்ளார்.
- குழந்தைகள் நலன்: குழந்தைகளின் படிப்பு மற்றும் மனநலம் பாதிக்கப்படும் என்பதாலேயே இத்தனை நாட்களாக விவாகரத்து கோருவதைத் தள்ளிப் போட்டேன்.
- சமூக வலைத்தளப் பதிவுகள்: விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கும், பொது இடங்களுக்கும் சென்று வருகிறார். அந்த நடிகை, விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காதது, எனக்கும் என் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமுகத் தீர்வு முயற்சி தோல்வி:
விவாகரத்து தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை. இறுதியாக, கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கௌரவமான முறையில் பேசிப் பிரிய முயன்றேன், அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன் என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 20-ல் விசாரணை:
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த (Sensitive) இந்த வழக்கை தனி அறையில் விசாரிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் விஜய்க்கும் அந்த நடிகைக்குமான தொடர்பிற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்த நடிகையின் பெயரை மனுவில் குறிப்பிடுவதை அவர் தற்போதைக்குத் தவிர்த்துள்ளார்.
இந்த வழக்கு வரும் மார்ச் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் விஜய்யும் சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யும் சங்கீதாவும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே சங்கீதா விஜய்யைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
