காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று (31) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் வரையிலும் உணரப்பட்டுள்ளன.
இந்திய நேரப்படி இன்று (01) அதிகாலை 12:47 மணியளவில், பூமிக்கு அடியில் 160 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. பிரதான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 4.7, 4.3, மற்றும் 5.0 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.
இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கும் ஒரு பகுதியாகும். கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இதேபோன்ற 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.