சியாட்டில்: செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் பல்வேறு வழிகளிலும் நமக்கு உதவுகிறது என்றாலும், அவை மனிதர்களைச் சோம்பேறிகளாக (Lazy) ஆக்கி வருவதாகவும், இதனால் வரும் காலத்தில் மனிதக் குலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த எச்சரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக, ஒரு பயனர் ஏஐ கருவி மூலம் ஒரு மணி நேரம் ஆகும் இணையப் பாடத்திட்டத்தை (Online Course) வெறும் சில நொடிகளில் முடித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெர்பிளெக்சிட்டி (Perplexity) மற்றும் காமெட் பிரவுசர்
இந்தக் காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ-க்கு சொந்தமானது எனச் சொல்லலாம். ஏஐ துறையில் முதலீடுகள் குவியும் நிலையில், பல ஏஐ நிறுவனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.
அவற்றில் ஒன்றுதான் பெர்பிளெக்சிட்டி (Perplexity). இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஏஐ டூல், தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, கூகுள் க்ரோமிற்கு சவால் விடும் வகையில் பெர்பிளெக்சிட்டி ஏஐ உடன் இயங்கும் ‘காமெட்’ (Comet) என்ற பிரவுசரை அறிமுகப்படுத்தியது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பகீர் சம்பவம்: ஒரு நிமிடத்தில் கோர்ஸ் நிறைவு
இந்தக் காமெட் பிரவுசரைச் சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நெட்டிசன், இந்த பிரவுசர் மூலம் தான் ஒரு இணையப் பாடத்திட்டத்தை (Coursera Course) வெறும் சில நொடிகளில் முடித்ததாகப் பதிவிட்டுள்ளார். வழக்கமாக அந்தப் பாடத்திட்டத்தை முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், ஏஐ உதவியுடன் அதைச் சில நொடிகளில் முடித்துள்ளார்.
இதற்காக பெர்பிளெக்சிட்டியின் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் காமெட் AI-க்கு நன்றி தெரிவித்து, “எனது கோர்ஸெரா பாடத்திட்டத்தை இப்போதுதான் முடித்தேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், 16 நொடிகள் ஓடும் காணொளி ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், அந்த நபர் “இந்தக் கோர்ஸ்ஸை முடிக்கவும்” என்று ஒரே ஒரு கட்டளையை மட்டும் ஏஐக்குக் கொடுக்கிறார். ஏஐ டூல் உடனடியாக எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து, பாடத்திட்டத்தை முடித்துக் காட்டியது.
நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸின் பதில்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில் பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இதற்குப் பதிலளித்தார்.
அவர், “கண்டிப்பாக இதைச் செய்யாதீர்கள் (Absolutely don’t do this)” என்று ஒரே வரியில் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது.
வல்லுநர்கள் மற்றும் நெட்டிசன்களின் எச்சரிக்கை
ஏஐ டூல்கள் பல வழிகளில் உதவினாலும், இதுபோலத் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
- வல்லுநர்களின் கருத்து: பெரும்பாலானோர் எல்லாவற்றுக்கும் ஏஐ பக்கம் செல்வதால், காலப்போக்கில் மனிதர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள். இது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் முட்டாளாக்கும் அல்லது மனித சமூகம் மெல்ல அறிவை இழக்க ஆரம்பிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
- நெட்டிசன் கருத்து: மற்றொரு நெட்டிசன் இது ஏற்படுத்தும் பிரச்சனையை விளக்கி, “நிச்சயம் பலரும் இனி இதைச் செய்வார்கள். இதன் மூலம் பலரும் ரெஸ்யூமை கூட மாற்றி அமைக்கிறார்கள். இதனால் திறமையான நபர்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாகத் தவறான நபர்களை நிறுவனங்கள் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இது ஒரு பிரச்சனையாக மாறப் போகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
