Headlines

வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை திட்டம் 2025-2026 இற்கு அமைச்சரவை ஒப்புதல் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை!

கொழும்பு: வீதி உட்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும், வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் ‘வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை திட்டம் – 2025-2026’ ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள தரவுகளின்படி, இலங்கையில் வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஒரு தீவிரமான மற்றும் தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளன. வருடாந்த இறப்பு விகிதம் 10,000 நபர்களுக்கு 11.2 என பதிவாகியுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது உலகளாவிய நடவடிக்கை தசாப்தத்திற்கான (2021-2030) வீதிப் பாதுகாப்புக்கான பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வரம்பை மீறுகிறது.

பயங்கரமான புள்ளிவிவரங்கள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் அறிக்கைகளின்படி, 2020-2024 காலப்பகுதியில் 118,697 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 12,322 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயில்வே கடவைகளின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சுமார் 400 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்கும், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான வீதிகளை உருவாக்குவதற்கும், வாகனங்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வீதிகளின் உட்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட ‘வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை திட்டம் – 2025-2026’ ஐ நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *