மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்: கொழும்பு கோட்டையில் கடும் வாகன நெரிசல்!
கொழும்பு: இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள், அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுத்து வரும் போராட்டத்தின் காரணமாக, கொம்பனித் தெருவிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு கோட்டைப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே ‘விதிகளுக்கு அமையப் பணிபுரியும்’ போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள், நேற்று (17) முதல் சுகயீன விடுமுறைப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்றும் இரண்டாம் நாளாகத் தொடர்கிறது.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்காவிட்டால், போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
