புதுடெல்லி: இந்தியாவின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (12) பதவியேற்றுக்கொண்டார். புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற உத்தியோகப்பூர்வ விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம், எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகு, இந்த உயர் பதவியை வகிக்கும் மூன்றாவது தமிழர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்தப் பதவியேற்பு விழாவில், பல மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர ஆளுநர் பதவியிலிருந்து அவர் நேற்று முறைப்படி ராஜினாமா செய்திருந்தார். தனது முதல் அதிகாரப்பூர்வப் பணியாக, ராஜ்ய சபை கட்சித் தலைவர்களுடன் அவர் இன்று மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
