புது டெல்லி: “மொந்தா” புயல் (Cyclone Montha) இன்று (ஒக். 27) பிற்பகுதியில் புயலாக வலுப்பெற்று, நாளை ஆந்திரப் பிரதேசக் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் (IMD) தெரிவித்துள்ளது. இது கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இந்த புயல் நெருங்கி வருவதால், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக மாறுகிறது
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (deep depression) கடந்த ஆறு மணி நேரத்தில் வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை புயலாகவும் (cyclonic storm), நாளை (ஒக். 28) அதி தீவிர புயலாகவும் (severe cyclonic storm) வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மொந்தா” புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் காக்கிநாடா அருகே, மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90-100 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை வீசக்கூடும் என இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
அனைத்து மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கட்டான சூழ்நிலைகளில் மேலதிக குழுக்கள் வரவழைக்கத் தயாராக உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 26 முதல் 29 ஆம் திகதி வரை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் ஒடிசா கடற்கரையோரங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
