உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்குத் தோல்வி
கௌகாத்தி: இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியை இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வீழ்த்தி, வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பிரகாசித்த தீப்தி ஷர்மா, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
கௌகாத்தியில் நேற்று (30) நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஜோடி சேர்ந்த தீப்தி ஷர்மா (53) மற்றும் அமன்ஜோத் கௌர் (57) ஆகியோர் 103 ஓட்டங்கள் சேர்த்து, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 269ஆக உயர்த்தினர்.
பதிலுக்கு, இலங்கை அணி 46 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணித் தலைவர் சமரி அதபத்து 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி ஷர்மா, ஆட்ட நாயகியாகத் தெரிவானார். இந்த சர்வதேச கிரிக்கெட் தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
