கொழும்பு: பாதாள உலகக் குழு உறுப்பினர் சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கனேமுல்ல சஞ்சீவ’வின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய பெண் சந்தேகநபராகிய இஷார சேவந்தி, நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID), நேபாள பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது, அவருடன் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்தின் பின்னர், நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்த இஷார சேவந்தி, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவர் நேபாளத்தில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டு, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த முக்கிய கைது, பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான விசாரணைகளில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
