வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாவில், காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிராக நேற்று (30) ஆயிரக்கணக்கானோர் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். திரையுலகினர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, காஸா அவலத்தை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
“நீங்கள் அனைவரும் ஒரு இனப்படுகொலையின் பார்வையாளர்கள்” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு, பலஸ்தீனக் கொடிகளுடன் திரைப்பட விழா நடைபெறும் அரங்கை நோக்கிப் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். “இனப்படுகொலையை நிறுத்து!”, “பலஸ்தீனை விடுதலை செய்!” போன்ற கோஷங்கள் அங்கு எதிரொலித்தன.
இந்தப் போராட்டத்திற்கு இணையாக, ‘வெனிஸ்4பலஸ்தீன்’ என்ற குழுவின் திறந்த கடிதத்தில், இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட திரையுலகினர் கையெழுத்திட்டு, காஸாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். முன்னதாக, மொராக்கோ இயக்குனர் மரியம் தௌசானியும் சிவப்பு கம்பளத்தில் பதாகை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காஸாவில் கொல்லப்பட்ட சிறுமியின் கதையைக் கூறும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ என்ற திரைப்படம், பிராட் பிட் போன்ற பிரபலங்களின் ஆதரவுடன் அடுத்த வாரம் இவ்விழாவில் திரையிடப்படவுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.