Headlines

தங்கத்தின் விலை 5% சரிந்தது! ரூ. 325,000-ஐ நெருங்கிய தங்கம் திடீர் வீழ்ச்சி!

கொழும்பு: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ஐந்து சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நீடித்து வந்த தங்கத்தின் தொடர்ச்சியான விலை உயர்வுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இது இலங்கைச் சந்தையிலும் மிக வலுவாக எதிரொலித்தது.

கொழும்புச் சந்தையில் ஒரு 24 கரட் சவரன் ஆபரணத் தங்கம் 325,000 ரூபாயை நெருங்கியது. ஒரு கிராம் தங்கம் 40,000 ரூபாயைக் கடந்து, சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச சந்தை சரிவு

இத்தகைய சூழலில், நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5 சதவீதம் சரிவடைந்துள்ளது. திங்கட்கிழமை அன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக 4381.21 டாலர்களாக இருந்தது. நேற்று அது 5% சரிந்து 4,082 டாலர்களாக வர்த்தகமானது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 5% வரை சரிவடைவது இதுவே முதல் முறையாகும்.

இன்றைய காலை நிலவரப்படி (அக். 22 காலை 9.54 மணி), ஸ்பாட் கோல்ட் (Spot Gold) ஒரு அவுன்ஸ் 4129 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ஒரு அவுன்ஸ்க்கு சுமார் 8% சரிவடைந்து 48.29 டாலர்களாக இருந்தது.

சரிவுக்கான காரணம் என்ன?

பல்வேறு நாடுகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்தது, சில நாடுகளுக்கு இடையிலான புவிசார் பதட்டங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்புகள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது.

இந்நிலையில், தங்கம் விலை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்த்ததே இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடிய விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபரைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குச் சந்தை (Equity Market) மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதனால், அவர்கள் தங்கத்தில் இருந்து லாபம் பார்த்துவிட்டு, அந்தப் பணத்தை பங்குச் சந்தை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

எனினும், இந்தத் தங்க விலை சரிவு குறுகிய கால திருத்தம் (Short-Term Correction) தான் எனக் கூறும் நிபுணர்கள், விலை குறைவைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *