இலங்கை மாணவர்களுக்கு கூகுளின் ‘ஜெமினி’ மேம்பட்ட அம்சங்கள் இலவசம்: அமைச்சு அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை மாணவர்கள் அனைவருக்கும், கூகுளின் ஜெமினி (Gemini) மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஏனைய பயன்கள் இலவசமாக வழங்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (29) அறிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் இன்று தொடங்குகிறது” என்ற தொனிப்பொருளில் இன்று காலை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், “இந்தச் செய்தி இன்று காலைதான் எனக்குக் கிடைத்தது. இதுவொரு ‘கேம் சேஞ்சர்’ (game changer),” எனக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், நாட்டின் ஒவ்வொரு மாணவரும் உலகத் தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் கற்றல் வளங்களை இலவசமாகப் பெற முடியும். இது நாட்டின் கல்வித் துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
