சாரதி அனுமதிப்பத்திர அச்சிடலில் பாரிய மோசடி: அரசுக்கு $15.3 மில்லியன் நட்டம் – அமைச்சர் அம்பலம்!
கொழும்பு: சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் ஒப்பந்தத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அதன்மூலம் அரசாங்கத்திற்கு 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க இன்று (08) அம்பலப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “2021ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு சாரதி அனுமதிப்பத்திர அட்டை 16.95 டொலர்களுக்கு அச்சிடப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னர் ஒரு அட்டை 5.95 டொலர்களுக்கே அச்சிடப்பட்டது,” என்றார். இந்த விலை அதிகமான ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 900,000 அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊழல் மோசடியைத் தொடர்ந்து, குறித்த ஒப்பந்தத்தை உடனடியாகத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், இது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சுச் செயலாளருக்குத் தான் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
