நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குடிவரவுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு 2 வருட சிறை!
கொழும்பு: உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், இலத்திரனியல் விசா வழங்கும் நடைமுறையை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால், ஹர்ஷ இலுக்பிட்டிய அந்தத் தடையுத்தரவைக் கடைப்பிடிக்கத் தவறி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாகச் செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவர் வேண்டுமென்றே புறக்கணித்ததாகத் தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழாம், இந்தத் தண்டனையை விதித்தது. இந்த குற்றவியல் வழக்கு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
