புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று முதல் அமல்: மக்களுக்கு ₹2.5 லட்சம் கோடி சேமிப்பு – பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவில் 4 அடுக்கு வரி விதிப்பிற்குப் பதிலாக, எளிமைப்படுத்தப்பட்ட 2 அடுக்கு ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தம் இன்று (22) முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், இந்திய மக்களுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
புதிய வரி விதிப்பின் கீழ், பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% வரி வரம்புகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையைக் கணிசமாகக் குறைக்கும்.
“இந்த சீர்திருத்தம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்; இது இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும்,” எனவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
