இந்தோனேசியாவில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்: சீனப் பயணத்தை ரத்து செய்தார் ஜனாதிபதி பிரபோவோ!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அரசாங்கத்திற்கு எதிராக மூண்டுள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தனது சீனப் பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனிடையே, வன்முறை அதிகரிப்பைக் காரணம் காட்டி, ‘டிக்டாக்’ சமூக ஊடகமும் தனது ‘லைவ்’ (LIVE) வசதியை இந்தோனேசியாவில் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மிக அதிகப்படியான வீட்டு வசதிக் கொடுப்பனவுக்கு (housing allowance) எதிராக ஜகார்த்தாவில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது நாட்டின் பல மாகாணங்களுக்கும் பரவியுள்ளன. மக்காசர் நகரில் பாராளுமன்றக் கட்டடத்திற்குத் தீ வைக்கப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொலிஸ் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

நிலைமையைத் தானே நேரடியாகக் கண்காணிப்பதற்காக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான (SCO) தனது சீனப் பயணத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் ‘டிக்டாக் லைவ்’ மூலம் பொலிஸாரின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்துவந்த நிலையில், வன்முறையைக் காரணம் காட்டி, டிக்டாக் நிறுவனம் அந்த வசதியை இடைநிறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *