Headlines

கிறிப்டோ முதலீடு சட்டவிரோதமல்ல: மத்திய வங்கி ஆளுநர்

கொழும்பு: இலங்கையில் கிறிப்டோகரன்சியில் (Cryptocurrency) முதலீடு செய்வதற்குச் சட்டத் தடை எதுவும் இல்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும், நாட்டிற்குள் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் கிறிப்டோகரன்சியைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவர் இன்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தற்போது கிறிப்டோகரன்சி தொடர்பில் சட்டங்கள் அல்லது விதிமுறைகள் இல்லாததால், அதில் முதலீடு செய்வதற்குத் தடை இல்லை. ஆனால், இலங்கைக்குள் இலங்கை ரூபாயை மாத்திரமே கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்த முடியும்,” என்றார். பணமோசடி நடவடிக்கைகளுக்கு கிறிப்டோகரன்சி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அடுத்த ஆண்டு புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இதன்மூலம், மெய்நிகர் நாணயச் சேவை வழங்குநர்கள், நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். இந்த பொருளாதார ஒழுங்குபடுத்தல் முக்கியமானது. அமைச்சர் வசந்த சமரசிங்க கிறிப்டோகரன்சி வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்தே, இந்த விவாதம் நாட்டில் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *