Headlines

ஈரான் தலைநகரில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; அமெரிக்கா பங்கேற்பு

தேஹ்ரான், பிப். 28:

ஈரான் தலைநகரான தேஹ்ரான் மீது இஸ்ரேல் சனிக்கிழமை பகலில் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்காவும் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேஹ்ரான் நகரின் மையப்பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்திலிருந்து ஒரு கரும் புகை மேகம் வானத்தில் எழுவதைக் காண முடிந்தது. ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி காமினியின் அலுவலகத்தின் அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 86 வயதான காமினி அப்போது அலுவலகத்தில் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் கடந்த சில நாட்களாகப் பொது வெளியில் காணப்படவில்லை.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது என்பதை, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் மற்றும் இந்த நடவடிக்கைகள் குறித்தத் தகவல்களை அறிந்த மற்றொரு நபர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரான் மீது அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்காகவும், ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்வதற்காகவும், இப்பகுதியில் அமெரிக்கா ஏற்கனவே போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் கொண்ட ஒரு பெரிய கடற்படையைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேஹ்ரானில் உள்ள சாட்சிகள், காமினியின் அலுவலகம் அருகே முதல் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், இந்த வெடிப்பு குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சித் செய்தி வெளியிட்டது. ஆனால், வெடிப்புக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தேஹ்ரான் முழுவதும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது. மேலும் சில வெடிப்புச் சத்தங்கள் தேஹ்ரானில் கேட்டன. இந்தத் தாக்குதல்களில் உயிர்ச் சேதங்கள் பற்றியத் தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தத் தாக்குதல் “அச்சுறுத்தல்களை அகற்ற” செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவர் அது குறித்து விரிவான விளக்கம் அளிக்கவில்லை. அதே நேரத்தில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஈரான் தரப்பில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களைத் தயார்படுத்துவதற்காக “முன்னெச்சரிக்கை விழிப்பூட்டல்” விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் நாடானது போரைத் தவிர்க்க விரும்பினாலும், யுரேனியம் செறிவூட்டும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளது. அதன் ஏவுகணைத் திட்டம் அல்லது ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு போன்ற பிற பிரச்சினைகள் குறித்துப் பேச அது விரும்பவில்லை. ஈரான் உடனடியாகத் திருப்பித் தாக்குமா என்பது குறித்துத் தெளிவானத் தகவல்கள் இல்லை. ஆனால், எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கைக்கும், இப்பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களும், தளங்களும் இலக்குகளாக இருக்கும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *