காஸா: இஸ்ரேலிய இராணுவம் காஸா நகருக்குள் தனது தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, வசிப்பிடங்களை அழித்து வரும் நிலையில், நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மாத்திரம் 78 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில், உணவு உதவிக்காகக் காத்திருந்த 32 பேரும் அடங்குவர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸா நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் “வெடிக்கும் ரோபோக்களைப்” பயன்படுத்துவதாகவும், இது ஒரு “கருகிய பூமி” கொள்கை எனவும் பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்த போதிலும், “பாதுகாப்பான இடம் எங்கும் இல்லை” எனக் கூறி, சுமார் ஒரு மில்லியன் மக்கள் காஸா நகரிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளனர்.
காஸாவில் ஐ.நா.வினால் பஞ்சம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த மனிதாபிமானப் பேரவலத்திற்கு மத்தியில், இஸ்ரேலின் கடல் முற்றுகையை உடைக்கும் நோக்கில், ‘குளோபல் சுமூத்’ என்ற பெயரில் கப்பல் தொடரணி ஒன்று ஸ்பெயினிலிருந்து காஸாவை நோக்கிப் புறப்பட்டுள்ளது.