கொழும்பு: நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Irrigation Department) இன்று (ஒக். 25) தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களு கங்கைப் படுகை பிரதான பாதிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின்படி, களனி கங்கை, அத்தனகலு ஓயா, ஜின் கங்கை, மற்றும் பென்தர கங்கை ஆகிய ஆறுகளில் சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இருப்பினும், களு கங்கைப் படுகையே (Kalu Ganga basin) மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
களு கங்கை பெருக்கெடுப்பதால், இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ள போதிலும், நிலைமை இன்னும் வெள்ள அபாய அளவை எட்டவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இருப்பினும், தொடர்ந்தும் கனமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளதுடன், களு கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றை அண்மித்துள்ள குடியிருப்பாளர்களையும் அவதானமாக இருக்குமாறும், எதிர்கால மழைவீழ்ச்சியின் அடிப்படையில் சாத்தியமான வெள்ள அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளது.
