கரூர் துயரம்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு!
டெல்லி: கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (13) அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையம் ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குக் காவல் துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என எதிர்க்கட்சிகளும், தவெக விதிமுறைகளை மீறியதே காரணம் என ஆளும் திமுகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன.
முதலில் கரூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த விசாரணைக்குத் தடை விதித்து, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.
உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தவறு என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் முரண்படுவதாகக் கூறி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையம் ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது, இந்த வழக்கில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
