கிளிநொச்சி: கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரணிப் படையினர் (STF) மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பெண்கள் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைகுளம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பின் போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
STF உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். எனினும், அவ்வேளையில் அங்கு கூடிய கம்பி மற்றும் தடிகளுடன் வந்த ஒரு குழுவினர், STF உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவித்துத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்தத் தாக்குதலில் காயமடைந்த இரண்டு STF உத்தியோகத்தர்கள் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தையடுத்து, இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலுடன் தொடர்புடைய ஐந்து பெண்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண்களின் வயது 16 க்கும் 32 க்கும் இடைப்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட பெண்கள் 26 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
