சென்னை: ‘கலக்கப் போவது யாரு’ புகழ் KPY பாலா, கதாநாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவை, தனது நண்பர் பாலாவுக்காக, தொகுப்பாளினி மணிமேகலை ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் தொகுத்து வழங்கியது, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மேடையில் இது குறித்துக் கண்ணீருடன் பேசிய பாலா, “நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒருவர் பணம் வாங்க மறுக்கிறார் என்றார்கள். அது மணிமேகலை எனத் தெரிந்ததும் நான் அழுதுவிட்டேன். ‘என் தம்பிக்காக இதைச் செய்கிறேன், பணம் கொடுத்தால் வரமாட்டேன்’ என அவர் நிபந்தனை விதித்துள்ளார்,” என்றார். பாலா பேசும்போது மணிமேகலையும் கண்ணீர் சிந்தினார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களான இவர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர். மணிமேகலை விஜய் டிவியிலிருந்து விலகிய கடினமான சூழலிலும், பாலா அவருக்குத் துணையாக நின்றார். அந்த நட்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவே, மணிமேகலை இந்த உதவியைச் செய்துள்ளார்.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான காணொளி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.