பஹ்ரைன்: பஹ்ரைனில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் (Asian Youth Games 2025) இலங்கையின் லஹிரு அச்சின்த (Lahiru Achintha) வியாழக்கிழமை அன்று ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அவர் 3 நிமிடங்கள் 57.42 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தைப் பிடித்தார். இது அவரது தனிப்பட்ட சிறந்த நேரமாகவும் (Personal Best) பதிவாகியுள்ளது.
இந்தப் போட்டியில், சீனாவின் லுஹியு ஷா (Luhiu Sha) வெள்ளிப் பதக்கத்தையும், ஹொங்கொங்கின் ஹோ சுன் அவ் (Ho Chun Au) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
நெத்மி கிம்ஹானிக்கு வெண்கலம்
இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், இலங்கையின் நெத்மி கிம்ஹானி (Nethmi Gimhani) 4 நிமிடங்கள் 52.32 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, வெண்கலப் பதக்கத்தைப் (Bronze) பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.
ஒரே நாளில் தடகளப் போட்டிகளில் இலங்கைக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
