வென்னப்புவ: வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், முதலில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர், கூறிய ஆயுதத்தால் தாக்கியதுடன், ரிவோல்வர் ரகத் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலின்போது, உயிரிழந்தவருடன் பயணித்த மற்றொருவர் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவர், மேல் நீதிமன்ற வழக்கு ஒன்றின் பிரதிவாதி எனவும், அந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.