கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் (ASEAN summit) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகரில் (Virtually) பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான நேரடிச் சந்திப்பிற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளதுடன், புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
தீபாவளிக் கொண்டாட்டங்கள்
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான உரையாடலைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) X தளத்தில் (ட்விட்டர்), “ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் மெய்நிகரில் இணைவதையும், ஆசியான் – இந்திய விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் இந்த வாரம் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், பிரதமர் மோடி மெய்நிகரில் கலந்து கொள்வதாகத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் உறுதிப்படுத்தினார்.
வர்த்தக ஒப்பந்தம் தாமதம்?
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களின் இந்தக் கூட்டம் மலேசியத் தலைநகரில் ஒக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய வர்த்தகப் பங்காளிகளும் கலந்துகொள்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒக்டோபர் 26 ஆம் திகதி மலேசியாவுக்கு வருவார் என மலேசிய வெளியுறவு அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இது, முன்பு உச்சிமாநாட்டில் நேரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட மோடியுடன், டிரம்ப் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக இந்தியாவில் ஊகங்களை ஏற்படுத்தியது.
இருப்பினும், மோடியின் இந்த மெய்நிகர் பங்கேற்பு அறிவிப்பு, அந்தச் சந்திப்பை ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவும் இந்தியாவும் பல மாதங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசி வருகின்றன. ஆனால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் சிக்கலடைந்தன. இதன் காரணமாக வாஷிங்டன் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீது 25% அபராத வரியை விதித்தது, இதன் மூலம் மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்தது.
டிரம்ப் மற்றும் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியதாகவும், அது பெரும்பாலும் வர்த்தகத்தையே மையமாகக் கொண்டிருந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாகவும், இது இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை 15% முதல் 16% வரை குறைக்கும் என்றும், இருப்பினும் எரிசக்தி மற்றும் விவசாயம் தொடர்பான முன்னேற்றத்தில் இது தங்கியுள்ளது என்றும் புதன்கிழமை இந்தியாவின் ‘Mint’ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
