தியான்ஜின்: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற 25ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து உரையாடியது, சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்று தலைவர்களும் சிநேகபூர்வமாக உரையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஞாயிற்றுக்கிழமை (31) தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆம் நிலைத் தலைவரும், அதிபரின் தலைமை அதிகாரியுமான காய் சியுடனும் (Cai Qi) மோடி தனியாகச் சந்தித்தது, இந்திய-சீன உறவுகளில் கட்சியின் பங்களிப்பு அதிகரிக்க உள்ளதைக் காட்டுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள சூழலில், ஆசியாவின் மூன்று பெரும் தலைவர்களின் இந்த ஒற்றுமையான சந்திப்பு, அமெரிக்காவுக்கு ஒரு செய்தியாக அனுப்பப்படுவதாகப் பார்க்கப்படுகிறது. “பிராந்திய அமைதியைப் பேணுவதில் SCO-வுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது,” என சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டிருந்தார்