விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (09) நடைபெற்ற பரபரப்பான போட்டியில், சகலதுறை வீராங்கனை நதீன் டி கிளார்க்கின் அதிரடியான ஆட்டத்தால், தென்னாபிரிக்க அணி, போட்டியை நடத்தும் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், 8ஆம் இலக்கத்தில் களமிறங்கிய வீராங்கனை ரிச்சா கோஷின் அபாரமான 94 ஓட்டங்களால், இந்திய அணி 251 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
பின்னர், 252 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியும், 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. எனினும், அணித் தலைவர் லோரா வோல்வார்ட்டின் 70 ஓட்டங்களும், இறுதி நேரத்தில் 8ஆம் இலக்கத்தில் களமிறங்கி, 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைக் குவித்த நதீன் டி கிளார்க்கின் அதிரடியும் தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தது.
இந்திய மண்ணில், உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென்னாபிரிக்கா வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலம், தென்னாபிரிக்கா தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
