சென்னை: ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் தெரு நாய்கள் குறித்த விவாதத்தில் பேசியது சர்ச்சையான நிலையில், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளான சுசி வெங்கட், நடந்தவை குறித்து இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் விளக்கமளித்துள்ளார். தொகுப்பாளர் கோபிநாத் தன்னை முழுமையாகப் பேசவிடாமல் பாதியிலேயே தடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“விபத்தில் மகனை இழந்த தந்தையின் வலியை நானும் உணர்ந்தேன். நானும் ஒரு விபத்தில் சிக்கியபோது, என் மகளைக் காப்பாற்றுவதா, குறுக்கே வந்த குழந்தையைக் காப்பாற்றுவதா என்ற பரிதவிப்பை உணர்ந்தேன். அந்த வலியைப் பற்றிப் பேச முற்பட்டபோது, ‘உங்கள் பேச்சை நிறுத்துங்கள்’ என கோபிநாத் கத்திவிட்டார்,” என சுசி வெங்கட் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி ஒளிபரப்பாகாது என நினைத்த நிலையில், அதையே ப்ரோமோவாகப் பயன்படுத்தியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாய்கள் போல ஊளையிட்டது, கோபிநாத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே செய்யப்பட்டது எனவும் அவர் தெளிவுபடுத்தினார். “யார் என்ன சொன்னாலும், குழந்தையை இழந்த அந்தத் தந்தை என் வலியைப் புரிந்துகொண்டார். அதுவே எனக்குப் போதும்,” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.