நுவரெலியா பகுதியில் பாதாள உலகக் குழுத் தலைவன் ‘கெஹெல்பத்தார பத்மே’யின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஐஸ் (ICE) போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், இத்தொழிற்சாலையை நடத்த வெளிநாட்டுப் பிரஜைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இன்று (செப்டம்பர் 4) புதிய சினமன் கார்டன் பொலிஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணையில், இரு பாகிஸ்தானியர்கள் இந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புத் தொழிற்சாலையை நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுத் தலைவனான ‘கெஹெல்பத்தார பத்மே’, நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4 மில்லியன் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இத்தொழிற்சாலையை நடத்துவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், இதற்காக 2,000 கிலோகிராமிற்கும் அதிகமான இரசாயனப் பொருட்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விஜேபால குறிப்பிட்டார். அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், அரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இது குறித்து CID விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.