Headlines

மரக்கறி விலை கடும் வீழ்ச்சி: நுவரெலியா விவசாயிகள் கண்ணீர்; உற்பத்திச் செலவைக்கூட ஈட்ட முடியவில்லை!

நுவரெலியா: நுவரெலியா மாவட்டத்தில் கரட், லீக்ஸ், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல், கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.


ஊவா மாகாணத்தால் பாதிப்பு

நுவரெலியா பொருளாதார மையங்களின் முதலாளிகள், உள்ளூர் விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு, ஊவா மாகாணத்திற்குச் சென்று அங்குள்ள விவசாயிகளிடமிருந்து மலிவாக மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

“முதலாளிகள் ஊவா மாகாணத்தில் மலிவாக மரக்கறிகளை வாங்கி, அவற்றை ‘நுவரெலியா மரக்கறிகள்’ என்று கூறி, பிற மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால், எமது மரக்கறிகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன,” என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


அழியும் நிலையில் மரக்கறிகள்

உரம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் நிலத்தில் வைத்திருக்க முடியாத கரட், லீக்ஸ் போன்ற பயிர்கள், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் மானியங்கள் எதையும் வழங்காத நிலையில், உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத இந்த விலை வீழ்ச்சிக்கு, நிரந்தரத் தீர்வொன்றை வழங்குமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்மட்டப் பிரதேசங்களிலும் இதே பயிர்கள் பயிரிடப்படுவதால், உற்பத்தி அதிகரித்து, தேவை குறைந்துள்ளதும் விலை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *